×

குழந்தைகளுக்கான சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கோயில் பூசாரி உள்பட 4 பேர் கைது: பெரியமேடு குடோனில் 200 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னையில் குழந்தைகளுக்கான சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கோயில் பூசாரி உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். பெரியமேடு குடோனில் இருந்து 200 கிலோ கஞ்சா சாக்லேட் உள்பட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள என்ஆர்டி மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு ராயபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த கண்ணன் (36) என்பவரை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அவரது வாகனத்தில் இருந்து குழந்தைகள் உண்ணும் சுமார் 40க்கும் மேற்பட்ட சாக்லேட் பாக்கெட்டுகள் இருந்தன. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தார். எனவே, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். அதில், ராயபுரம் 58வது வார்டு பகுதி மாநகராட்சி அலுவலகத்தில் 7 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிவதாகவும், ராயபுரம் பகுதியில் வசித்து வரும் கோயில் பூசாரி கவுதம் (39) என்பவர், சாக்லேட் பாக்கெட்டுகளை தன்னிடம் கொடுத்ததாகவும் கூறினார். இதனையடுத்து, கவுதமையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அப்போது, அவை அனைத்தும் கஞ்சா சாக்லேட் என்பதும், இதை பெரியமேடு பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரிடம் வாங்கியதாகவும் கவுதம் தெரிவித்தார். இந்நிலையில், வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி கைப்பற்றப்பட்ட சாக்லேட்டின் தன்மை குறித்து அறிய அவற்றை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தார். சோதனையில் அனைத்தும் கஞ்சா கலந்த சாக்லேட் என்பதும், இது மூளையின் நரம்பு மண்டலத்தை எளிதில் பாதிப்படைய செய்யும் தன்மை கொண்டது எனவும் தெரியவந்தது.இதை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் பெரியமேட்டில் உள்ள சுரேஷ் என்பவரின் குடோனிற்கு சென்று சோதனையிட்டபோது, அங்கு இதுபோல் சுமார் 200க்கும் மேற்பட்ட சாக்லேட்டுகளும் அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அங்கிருந்து அவர்கள் பயன்படுத்திய கார், சிறிய லோடு வேன் மற்றும் போதைப்பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் குடோனில் பொருட்களை பதுக்கி வைத்திருந்த வடசென்னை கஞ்சா சாக்லேட் வியாபாரத்தின் முக்கிய புள்ளியான சந்தோஷ்குமார் (45) என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே ஒரு சில காவல் நிலையங்களில்  பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கெல்லாம் தலைவனான சுரேஷ் என்பவரையும், கூட்டாளியான வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரஜபதி (36) என்பவரையும் துணை ஆணையர் தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து மொத்தம் சாக்லேட் வடிவிலான கஞ்சா மற்றும் 200 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு, 4 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். போலீசாரின் வாகன சோதனையில், குழந்தைகள் சாப்பிடும் சாக்லேட் வடிவில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ராயபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    …

The post குழந்தைகளுக்கான சாக்லேட் வடிவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கோயில் பூசாரி உள்பட 4 பேர் கைது: பெரியமேடு குடோனில் 200 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Periyamedu ,Thandaiyarpet ,Chennai ,
× RELATED துணிக்கடையில் தீ விபத்து